Skip to main content

தபால் நிலையத்திற்கு பூட்டு போடச் சென்ற காங்கிரஸ் கட்சியினர்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

nn

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

 

அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேற்கண்ட நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் கைது செய்யும் நடவடிக்கைக்கும் தயாராக இருந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை எஸ்.கே.சி ரோட்டில் காங்கிரசார் ஒன்று திரண்டனர். மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் கவுன்சிலருமான ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா, சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஜாவர் அலி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜிப்பர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு பாட்ஷா, முகமது யூசுப், கனகராஜ், விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நான்கு ரோட்டிற்கு கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர். அப்போது சூரம்பட்டி போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி தடையை மீறி பூட்டு போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனால் காங்கிரசார் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்