ஒரு ட்வீட்டுக்கு ரூபாய் 2 வாங்கிக் கொண்டு நான் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, "காங்கிரஸில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு ட்வீட்டுக்கு ரூபாய் 2 வாங்கிக் கொண்டு நான் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள். எனது டெல்லி பயணம் இவ்வளவு பெரிதாக்கப்படும் எனத் தெரியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டிற்கே அமைச்சர் தானே; அவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா? கட்சிக்கு அப்பாற்பட்டு அமித்ஷா நலம்பெற வாழ்த்துக் கூறியதற்கு பா.ஜ.க.வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள். பெண்கள் மீதான குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் என்பது பற்றிதான் தற்போது சிந்திக்க வேண்டும். பிரியங்கா காந்தியின் குர்தாவைப் பிடித்து போலீசார் இழுத்ததற்கு யாரும் மன்னிப்புக் கேட்டார்களா? தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்" என்றார்.