கடலுார் மாவட்டம், கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்கள் கிழமை இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் பணம், படை பலத்துடன் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர் ஓட்டுக்கேட்பது வேதனை அளிக்கிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுப்பதாக கேள்விப்பட்டேன். அந்த ஊரில் 3 ஆயிரம் ஓட்டுக்கள் இருந்தால் எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுத்தால் சம்மந்தப்பட்டவர் மக்கள் பணி செய்யாமல், செலவு செய்த பணத்தை திருடவே முயற்சிப்பார், என்பதை அரசு உணர வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ்யத்தை சீரழிக்கின்றனர். இடைத்தேர்தலில் முதல்வர், அமைச்சர் ஓட்டுக்கேட்ககூடாது என்ற மரபு உள்ளது. ஆனால் மரபையே மீறுகின்றனர்.
மக்கள் உரிமையில் அரசு தலையிடக்கூடாது. பெண்கள் வாசலில் கோலமிடுவது அவர்கள் விருப்பம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வாசலில் கோலமிட்னர். எதிர்ப்பு தெரிவிப்பது மக்கள் அவரவர் விருப்பம். இதற்காக கோலமிட்டவர்களை கைது செய்வது ஜனநாயகத்தின் கேலி கூத்தாக உள்ளதுடன், மத்திய அரசின், கைப்பாவையாக தமிழக அரசு செயல்பகிறது.
கன்னியமிக்க காவால் துறை தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு ஏவலாளியாக இருக்க கூடாது. கோலமிட்டவர்களை கைது செய்ய போலீசாருக்கு யார் உத்தரவு கொடுத்தது. தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து இது வரை உத்தரவிட்டது யார் என்ற விபரம் தெரிய வில்லை. இந்நிலையில் கோலமிட்டவர்களை கைது செய்த போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எங்கள் வீட்டிலும், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டுள்ளோம் முடிந்தால் போலீசார் எங்களையும் கைது செய்யட்டும். எடப்பாடிக்கு நிர்வாகத்திறன் இல்லாமல் ஓடி ஒளிகிறார். தமிழகம் அராஜகத்தின் உச்சமாக உள்ளது" என்றார்.