இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி உள்ளிட்ட இருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி கோவை குனியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சிகரெட் வாங்குவதுபோல் நடித்துக் கடை உரிமையாளரான தனலட்சுமி என்பவரின் செயினைப் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருவரையும் துரத்த முற்பட்டும் அவர்கள் வேகமாக இடத்தைவிட்டு தப்பித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளையில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் செயின் பறிப்பின்போது இருசக்கர வாகனத்தை இயக்கியது அந்த சிறுவன் என்பதும், செயின் பறிப்பில் ஈடுபட்டது கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பைசல் ரகுமான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குனியமுத்தூர், பி.கே.புதூர், இடையர்பாளையம் என 5க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியே செயின் பறிப்பில் ஈடுபட்டது அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.