நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், “பணம் செலுத்தியவர்களுக்கு மயிலாப்பூர் நிதி நிறுவனம் சார்பில் வேதநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதங்களாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ளது. கடந்த 125 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிறுவனத்தில் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளார். இந்தப் புகார் குறித்து தேவநாதனை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் தாமரை சின்னத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.