தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுக்கும் தெலுங்கு, கன்னட புத்தாண்டு - உகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி!
’’இனிமையாகவும், இதய பூர்வமாகவும் கொண்டாடும் உகாதி புத்தாண்டு திருநாளை (18.3.2018) முன்னிட்டு தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநில மக்களுடன்
தொன்று தொட்டு அன்பும், பண்பும் மிக்க மனித நேய உறவை தமிழக மக்கள் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். அந்த தொப்புள்கொடி திராவிட வரலாறு என்றைக்கும் தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் உகாதி திருநாளை அனைவரும் மிக்க மனநிறைவுடன் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போதெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான உறவினை பாதுகாத்து, நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. பெங்களூரில் அய்யன் திருவள்ளுவர் சிலை, சென்னையில் கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் சிலை ஆகியவற்றை தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது திறந்து வைத்து அண்டை மாநிலங்களுக்குள் நிலவி வருகின்ற நல்லுறவுக்கான மிக முக்கியமான அடையாளங்களை உருவாக்கியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதே போல் உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை அதிமுக அரசு ரத்து செய்தாலும், 2006-ல் கழக அரசு அமைந்தவுடன் அந்த புத்தாண்டு தினத்திற்கு அரசு விடுமுறை அளித்து தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் இதயத்தில் பால்வார்த்த அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதுமட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு
உதவியாக பாட நூல்களை தமிழக அரசே தயாரித்து வழங்கி, தெலுங்கு, கன்னட மொழி மாணவ, மாணவிகளும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு என்பதை நினைவுபடுத்தி, தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநிலங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒருவருக்கொருவர் பாசமும் நேசமும் காட்டி, ஒவ்வொருவர் முன்னேற்றத்திற்கும் பரந்து விரிந்த மனப்பான்மையுடன் உதவிக்கொண்டு, பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தின் உறவை தொய்வின்றி தொடருவோம் என்றுஅனைவரையும் இந்த உகாதி திருநாளில் மிகுந்த பாசத்துடனும், பற்றுடனும் வாழ்த்துகிறேன்.’’