காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பிள்ளைகளை காங்கிரஸ் கட்சில் சேர்த்தால் தான் மற்றகட்சிகளில் உள்ள இளைஞர்களை இணைக்க முடியும் என்று வடகாட்டில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
நிர்வாகிகள் கூட்டம் :
சிவகங்கை பாரளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியில் திருவரங்குளம் ஒன்றிய, நகர, வட்டார காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தர்மதங்கவேல் தலைமை வகித்தார். முன்னால் எம்.எல்.ஏக்கள் புஸ்பராஜ், சுப்புராம், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் சகாயராஜ் வரவேற்றார். கூட்டத்தில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். கூட்டத்தில் மணிகண்டன் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாரத் தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.
இளைஞர்களை சேர்க்க வேண்டும் :
கூட்டத்தில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது.. காங்கிரஸ் கட்சி பாரம்பரியமிக்க கட்சி. ஆனால் அந்த கட்சியில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நாம் முதலில் நம் பிள்ளைகளை கட்சியில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு மற்ற இளைஞர்களை கட்சியில் இணைக்க வேண்டும். திராவிடக் கட்சிகளில் அந்த குடும்பமே ஒரே கட்சியில் இருப்பார்கள். அது போல நாம் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல அனைத்து சமுதாய மக்களையும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் வர இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் இப்போதே பூத் கமிட்டிகளை அமைத்து செயல்பட வேண்டும்.
சுற்றுப்பயணம் :
ஜூலை 15 க்கு பிறகு மக்களை சந்திக்க சுற்றுபயணம் வருவேன். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி வங்கி கணக்கில் பணம், கருப்பு பணம் மீட்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இது எதுவும் நடக்கவில்லை. அதனால் நாம் நன்றாக செயல்பட வேண்டும். விவசாயிகளை ஏமாற்றி இன்சூரன்ஸ் என்ற பெயரில் வசூல் செய்த பணம் என்னாச்சு என்பதே தெரியவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் 40 தொகுதிகளையும் வெற்றி பெற்றோம். அதே போல எதிர்வரும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். அதே போல ஆவணத்தான்கோட்டையில் அறந்தாங்கி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.