தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.
இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.
இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.
தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.