பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தேர்தல் வாக்குப்பதிவு தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் தேதிக்கும் 45 நாட்கள் இடைவெளி இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தமுறை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் பதவிவிலகி அதற்கான இடங்கள் காலியாக இருந்ததன் காரணமாக ஒரு வாரம் கால தாமதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவுகளோடு ஒப்புக்கு சீட்டுகளையும் 100% இணைத்து ஒப்பீடு செய்து முடிவு வெளியிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.