சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் 'தான் ஓடி ஒளியவில்லை இன்று சென்னை திரும்பியவுடன் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்' என வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. நேற்று அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 'இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. பள்ளி நிர்வாகக் குழுதான் ஏற்பாடுகளை செய்து இருந்தது' என்று வாய்மொழியாக தமிழரசி தெரிவித்திருந்தார்.
நேற்று மாலை மீண்டும் ஒருமுறை தலைமை ஆசிரியை தமிழரசியிடம் விசாரணை நடத்திய போது எழுத்துப்பூர்வமாக என்ன நடந்தது என்ற விளக்கத்தை அதிகாரிகள் பெற்றுள்ளார்கள். அந்த எழுத்துப்பூர்வ விளக்கத்தில் பள்ளி நிர்வாக குழுவினர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள் என்று தமிழரசி குறிப்பிடவில்லை. பள்ளி நிர்வாகக் குழுவினர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதுகுறித்த கேள்விக்கு 'தேவையில்லாமல் அவர்களை எல்லாம் இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டாம்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இப்படி முரண்பட்ட தகவல்கள் தெரிவித்தது ஏன் என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். தமிழரசி மீதான பணியிட மாற்ற நடவடிக்கையை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நன்கொடை பெறுவதற்காகவே சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிக்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியரின் இந்த முரண்பட்ட தகவலால் சர்ச்சையில் சிக்கிய இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் பணியிட மாற்றத்திற்கு பதிலாக பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.