கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் கிராமத்தில் பலதரப்பு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், பட்டியலினத்து மக்கள் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்களை எப்போதும் சமூக ரீதியாக அழுத்தி வைப்பதும், கிராமத்தில் டீ கடையில் இரட்டைக் குவளை முறையைக் கடைப்பிடிப்பதும், கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும் நடந்து வருகிறது. இவையெல்லாம், கோட்டையூர் பட்டியலினத்து மக்கள் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு பிறகே வெளியில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, அங்கு உள்ள பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விருப்பப்படியே பட்டியலின மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கோட்டையூர் கிராமத்தின் நடைமுறை. கோட்டையூர் கிராமத்தில் அம்பேத்கர் படங்களையோ அல்லது பட்டியலினத்து தலைவர்களுடைய படங்களையோ போட்டு பேனர் வைத்தால் அதை அகற்றச் சொல்லியும் தகராறில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி ஜின்மநத்தம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டியலின இளைஞர்கள் அருண்குமார், முத்துராஜ் ஆகியோர் தேரின் வடக்கயிற்றைப் பிடித்துள்ளனர். அப்போது, பெரும்பான்மை சமூகப் பிரிவைச் சேர்ந்த நபர்கள் அந்த இளைஞர்களிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு நடந்ததை அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த மரலிங்கா என்ற நபரிடம் தகவலைச் சொல்லியுள்ளனர்.
இதன்பிறகு வாய் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி மரலிங்கா, இளைஞர்களை அழைத்து வந்துள்ளார். ஆனாலும், ஆத்திரம் தீராத பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோகன், அருண், ஐயனார், ராவேந்திரன், பிரபு ஆகியோர் பட்டியலின மக்கள் இருக்கும் தெருவிற்குச் சென்று மரலிங்காவிடம் தகராறு செய்துள்ளனர். இந்தத் தகராறில், மேற்கண்ட இளைஞர்கள், மரலிங்காவின் கையை கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இத்தகவலை ஊர் முக்கியஸ்தரிடம் புகார் தெரிவித்து நியாயம் கேட்க, பட்டியலின இளைஞர்கள், பெண்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தினர் இருக்கும் தெருவிற்குச் சென்றுள்ளனர். அப்போது பட்டியலின மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் 6 ஆண்கள் 3 பெண்கள் உட்பட 9 பேருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு இரண்டு கைகள், இரண்டு கால்களையும் வெட்டி உள்ளனர். நான்கு இளைஞர்களுக்கு கடுமையான வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. மூன்று பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டியலின மக்கள் காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது, நீங்கள் ஏன் அந்த தெருவிற்குச் சென்றீர்கள் என்று கூறி பட்டியலின மக்கள் ஏழு பேர் மீது பிரிவு 307ன் கீழ் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகளும், முற்போக்கு அமைப்புகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அந்த பெரும்பான்மையினர் மூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து பேசிய மக்கள் அதிகாரம் கிருஷ்ணகிரி மண்டல குழு உறுப்பினர், “காவல்துறையும், நிர்வாகமும் ஒரு சார்பாக எப்போதும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மறுபக்கத்தில் தொடர்ந்து சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் சிவக்குமார் போன்றோர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நீதிமன்றம் பிணை வழங்கக்கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் இரட்டை டம்ளர் முறை குறித்த ஆய்வு செய்து, இரட்டை டம்ளர் வழங்கும் டீக்கடை, ஓட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.