தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று (22.10.2021) நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, நடைபெற்றுவரும் மறைமுக தேர்தலில் சில இடங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவிலேயே இரண்டு தரப்பினர் போட்டியிடுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக ஒன்றியச் செயலாளர் தயாளன் வேட்பாளராக உள்ள நிலையில், திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் நல்லூர் கண்ணனும் ஒன்றிய தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளார். இதனால் திமுகவைச் சேர்ந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒன்றியத்தில் மொத்தம் 26 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திமுக 18, விசிக 1, அதிமுக 3, பாமக 2, சுயேச்சைகள் 3 என ஒன்றியக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்த மோதல் காரணமாக மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.