ஒடிசாவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவுடன் இருவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் ரயில்வே காவல்துறை தனிப்படை சிறப்பு எஸ்.ஐ பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) அதிகாலை தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஏறி ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சோதனை நடத்தினர்.
இன்ஜின் அருகே இணைக்கப்பட்டு உள்ள முன்பதிவில்லா பெட்டியில் சோதனை நடத்தினர். அந்தப் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு வாலிபர்கள் அமர்ந்து இருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் 3.5 கிலோ கஞ்சா, நான்கு பொட்டலங்களில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த வாலிபர்கள், ஒடிசா மாநிலம் சுபர்னாபூர் மாவட்டம் பிராமணி பகுதியைச் சேர்ந்த சுனா (22), ராஜேஷ்சத்ரியா (25) என்பதும், சொந்த மாநிலத்தில் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, திருப்பூரில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.