நம்பிக்கை வாக்கெடுப்பு: அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியிடம் முறையிட முடிவு: ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் மேதகு ஜனாதிபதி அவர்களை சந்தித்து முறையிட உள்ளனர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (29-08-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் வந்து சந்தித்த, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களான, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர், தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆளுநரை சந்தித்து, முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில், உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
ஸ்டாலின்: திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், இதுகுறித்து முறையிட மேதகு இந்திய ஜனாதிபதி அவர்களைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். வரும் 31 ஆம் தேதி நேரம் ஒதுக்கித் தருவதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், சந்திப்புக்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எப்படியும் 31ம் தேதி தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்னைகள் குறித்து மேதகு ஜனாதிபதி அவர்களிடம் முறையிடுவார்கள்.
செய்தியாளர்: உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பீர்களா அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறீர்களா?
ஸ்டாலின்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள, புற்றுநோய் வருவதற்குக் காரணமான குட்கா போதைப்பொருட்கள், போலீஸ் உயரதிகாரியான ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மாமூல் கொடுத்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என்பதை நாங்கள் ஆதாரங்களோடு, குட்கா விற்பனை செய்த கடைகளின் முகவரிகள் மற்றும் புகைப்படங்களோடு சட்டமன்றத்தில் காண்பித்தது உண்மை. ஆனால், அதன் மீது இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது நாற்பது நாட்கள் கழித்து உரிமைக்குழு நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் என்ன என்று நேற்றே தெரிவித்து இருந்தேன். இன்றைக்கும் கூட குட்கா விற்பனை நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. இந்தநிலையில்தான், அவர்கள் எங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அதுகுறித்து நாங்கள் எங்களுடைய சட்ட வல்லுநர்களோடு கலந்துப்பேசி, அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு தெரிவித்தார்.