காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ராணுவ கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பொம்மை வியாபாரம் செய்து வருபவர் தர்மலிங்கம் (24). இவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று அதிகாலை தனது வண்டியிலிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
இந்த சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் தர்மலிங்கத்தை மீட்டு ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு போராடிய தர்மலிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.