தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் தற்பொழுது போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் ஆகிய இருவர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது. அண்மையில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் செய்யப்பட்டதாகவும், இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம் எனவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர் குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.