திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலமான கோடை இளவரசியை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோடைக்கு வந்து கோடை இளவரசியை இயற்கையை ரசித்து பார்த்துவிட்டு போய் வருவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கொடைக்கானல் மற்றும் கீழ்மலை,மேல்மலை மலைப்பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள்,வணிகவளாகம், வீடுகள் என இருந்து வருகிறது. இப்படி இருக்கக் கூடிய கட்டடங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கிறது.
இப்படி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டிய 45 கட்டடங்களுக்கு சீல் வைத்து ஜனவரி 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இருந்த 45 கட்டடங்களுக்கு மின் இணைப்பை துண்டித்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் பின் மீண்டும் மதுரை ஐகோர்ட் கிளை கொடைக்கானலில் 1471 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இருக்கிறது அந்தக் கட்டடங்களையும் ஆய்வு செய்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து அதன் அறிக்கையை வருகிற மார்ச் 16ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோடையிலுள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் சர்வ கட்சியுடன் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். கோர்ட் உத்தரவை நிறுத்தி எங்களுக்கு கருணை அடிப்படையில் கால அவகாசம் கொடுங்கள் அதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. அதுபோல் 25 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் ப்ளானை நிறைவேற்றி கொடுங்கள் என புகார் மனு கொடுத்திருந்தனர். அப்படி இருந்தும் கோடை நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்க தயாராகி வந்தனர். இந்த விஷயம் கோடை மக்களுக்கு தெரிந்ததின் பேரில்தான் திடீரென கோடையில் வசிக்கக்கூடிய லாட்ஜ் உரிமையாளர்களும், வணிகப் பெருமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என ஒட்டுமொத்த கோடையில் உள்ள மக்களும் நகரில் தங்கும் விடுதிகளையும், உணவகங்களையும், கடைகளையும் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடி கடையடைப்பு போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
இதன் இதன் மூலம் சுற்றுலா பயணிகளும் கோடைக்கு வரத்து குறைந்தது. இந்த கடையடைப்பு போராட்டம் மூலம் கோர்ட் விதித்துள்ள உத்தரவை நிறுத்தி கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோடையில் உள்ள மக்களும், சர்வகட்சியினரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதை மீறி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கினால் தொடர் போராட்டங்களில் இறங்கவும் தயாராகி வருகிறார்கள்.