சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அஸ்வத்தாமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ‘ஏற்கனவே விசாரணைக்குழுவில் சிபிஐ அதிகாரிகள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.’ என்று கூறியதைத் தொடர்ந்து, அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ‘ஐஐடி நிர்வாகம், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான சரியான நேரம் இது.’ என சில கருத்துக்களையும் தனது பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.
*மாணவர்களுக்கு கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், சரியாகப் படிக்காத மாணவர்களை ஊக்குவித்து நன்றாகப் பயின்று சிறப்பாக தேர்ச்சியடைய வைக்கும் கடமையும் பேராசிரியர்களுக்கு உள்ளது.
*இளம் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கக்கூடிய வகையில் விரைவில் நிரந்தரத் தீர்வைக் கொண்டு வரவேண்டும்.
*சென்னை ஐஐடி மட்டுமில்லாமல், நாட்டில் உள்ள மற்ற ஐஐடி நிர்வாகங்களும் இத்தகைய இறப்புகளைத் தடுப்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும்.
*பாத்திமா லத்தீப் மரண சம்பவம் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதன் காரணமாக போராட்டத்தையும் சந்திக்க வைத்தது. அந்த அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சிபிஐ-க்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.
*இந்த மரண சம்பவத்தில் தாக்கல் செய்யப்படும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் குற்றப்பத்திரிக்கையில் திருப்தி அடையாவிட்டால், மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடலாம்.
*அனுதாபம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆனாலும், தற்போது விசாரிக்கும் சென்னை மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் தனது விசாரணை அறிக்கையை ஜனவரி 22-ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.