தென்மாவட்டத்தில், பள்ளிகளுக்கான பொதுத்தேர்வில் ‘விருதுகளை’ குவித்துவரும் மாவட்டம் அது! அங்கு, ‘பட்பட்.. படபட’ என வெடித்தபடியே உள்ள ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு, கையில் புகாரோடு வந்தார், சிறுபான்மையினச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். அந்தக் காவல்நிலையத்தில், ‘செல்வ மைந்தன்’ ஆனவர், சார்பு ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
தனது அறையில் புகாரோடு வந்த அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய அந்தச் சார்பு ஆய்வாளர், ‘புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தன்னுடைய தயவு தேவைப்படும் அல்லவா! விருப்பத்தை ‘ஜென்டில்’ ஆக வெளிப்படுத்திப் பார்ப்போம்!’ என, சில்மிஷ முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவர் நினைத்ததற்கு மாறாக, அந்தப் பெண் கத்தி கூச்சல் போட, காவல்நிலையம் களேபரமானது.
இந்த விவகாரம், அந்த மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி வரையிலும் போனது. “இப்ப என்ன நடந்துபோச்சு! எஸ்.ஐ. தெரியாத்தனமா ஆசைப்பட்டுட்டார். விவகாரத்தை இத்தோடு விட்ருங்க. நடந்ததை ஒரு அவமானமா நினைச்சீங்கன்னா. அதற்கு ஈடான தொகையை, எஸ்.ஐ.கிட்ட வாங்கி தந்திருவோம். அதை அபராதமா அவரும் கட்டிருவாரு.” என்று பஞ்சாயத்து பேச, அந்தப் பெண்ணும் வேறு வழி தெரியாமல், அமைதியாகிவிட்டார்.
இரட்டைக் கொலையின் காரணமாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் நடவடிக்கைக்கு ஆளான நிலையில், மேற்கண்ட சில்மிஷ விவகாரம், அந்த மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. “பலர் பணிபுரியும், பொது மக்களும் வந்து செல்லும் காவல் நிலையத்தில், புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணிடம், சார்பு ஆய்வாளர் ஒருவரால் அத்துமீற முடிகிறதென்றால், இது முதன்முதலில் அவர் செய்த தவறாக நிச்சயம் இருக்க முடியாது. இதற்குமுன், எத்தனை பேரிடம் இதுபோல் நடந்துகொண்டாரோ? ‘காவல்துறை அதிகாரி ஆயிற்றே! அவருடைய தவறை எப்படித் தட்டி கேட்க முடியும்?’ என்று எத்தனை பெண்கள், அவரது வலையில் சிக்கினார்களோ?” என்றெல்லாம் குமுறலாக விவாதிக்கப்படுகிறது.
சில்மிஷம் நடத்திய செல்வ மைந்தனான, அந்த சார்பு ஆய்வாளரை தொடர்புகொண்டோம். “இல்ல சார்.. இல்ல சார்..” என்றவர், “அதுவந்து, ஃபால்ஸ் கம்ப்ளைண்ட்.” என்று சமாளித்தவரிடம் ‘போலீஸ் சோர்ஸிடம். நடந்த தவறை உறுதிபடுத்திய பிறகே உங்களிடம் கேள்வி கேட்கிறோம்.’ என்றோம். அதற்கு, அந்தச் சார்பு ஆய்வாளரிடம் பதில் இல்லை.
வேலியே பயிரை மேய்கிறதென்று, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சொல்லித் தொலைக்க வேண்டுமோ?