சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தை சேர்ந்த ஒரு பெண் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பில் 2016ம் ஆண்டு பணியாற்றி வந்தேன். இயக்க தலைவர் ஸ்ரீகண்டனுக்கு இந்தி மொழி தெரியாததால் டெல்லிக்கு அவருடன் மொழிபெயர்ப்பாளராக தனியாக சென்று வந்தேன்.
![Kodambakkam](http://image.nakkheeran.in/cdn/farfuture/xjWmNV1CyI63BGPN_RvP22EU2Am5O6SvXxpf7flGj0Y/1583212098/sites/default/files/inline-images/k3211111.jpg)
பின்னர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால், வாட்ஸ்அப் மூலம் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினமா செய்வதாக தகவல் அனுப்பினார். மேலும், எனது சகோதரரை அழைத்து அவரது அமைப்பில் சேரவில்லை என்றால், உனது சகோதரி குறித்த ஆபாச கதைகளை நான் வெளியிடுவேன் என்று மிரட்டினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது ஐபிசி 294(பி), 354(ஏ), 506(1) மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு பிரிவு என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி அறிந்த ஸ்ரீகண்டன் போலீசார் கைது செய்ய கூடும் என்பதால் தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையே கடந்த 5ம் தேதி காரப்பாக்கம் கே.கே.ஆர்.தோட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் விமல் (40) என்பவர், பிரதமர் மோடியின் புத்தகம் அச்சடித்து வெளியிடுவதற்காக 14 லட்சம் என்னிடம் கடன் வாங்கினார். ஆனால் இதுவரை பணத்தை அவர் கொடுக்க வில்லை. இதுபற்றி கேட்டால் மிரட்டுகிறார், என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தி.நகர் துணை கமிஷனர் உத்தரவின்படி கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த கோடம்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகண்டனை கைது செய்தனர்.