கடந்த 2022 ஜனவரி 12-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் ‘ஆபாச பேச்சுக்கு அபராதம் செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ.! - ரீட்டா ‘ஓபன்’ பேட்டி!’ என்னும் தலைப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் சம்பந்தப்பட்ட வில்லங்க விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டோம்.
தற்போது அதே ரீட்டா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து, தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக அளித்திருக்கும் புகாரில் ‘மான்ராஜ் எம்.எல்.ஏ.வும் அவருடைய ஆதரவாளர்களும் முன்ஜாமீன் பெற்று அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எந்தவித தவறும் செய்யாத என்னைப் பற்றி மிகவும் தரக்குறைவாகவும், கொலை செய்துவிடுவதாகவும், விபச்சார வழக்கில் தள்ளிவிடுவோம் என்றும் சாதி குறித்துப் பேசியதாக வழக்கு போடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த வழக்கை வேறொரு புலனாய்வுக் காவல்துறைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ரீட்டா அனுப்பியிருக்கும் மனுவில், ‘நான் சார்ந்திருக்கும் அதிமுகவைச் சார்ந்த பெண்களிடம் தவறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பரவச்செய்து, எங்களைப் பொதுவெளியில் நடமாடவிடாமல் செய்துவிட்டனர். எங்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக இருந்த மான்ராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், இனிமேல் எந்தப் பெண்களையும் இதுபோல் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசி பதிவு செய்யாமல் இருக்கவேண்டும். தவறு செய்தவர் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதை அனைவரும் உணரும் விதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் புகாரளிக்க முன்வருவார்கள். பெண்களை தங்கள் காமப்பசிக்குத் தேவை என்ற எண்ணம் இனி யாருக்கும் வராத அளவில் தண்டனை வழங்கவேண்டும். இந்த வழக்கில் என்னைச் சார்ந்திருக்கும் பெண்களுக்காக உயிரையும் தியாகம் செய்வேன்.’ என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.
விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது மனக்குமுறலை ரீட்டா வெளிப்படுத்திய நிலையில், நாம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜை அவருடைய கைபேசி எண் 84XXXXXX60-ல் தொடர்புகொண்டோம். தொடர்ந்து அவருடைய செல்போன் ஸ்விட்ச்-ஆப் நிலையிலேயே இருந்தது. தனது விளக்கத்தை மான்ராஜ் எம்.எல்.ஏ. பகிர முன்வந்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.