இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுபற்றி கே.ராஜன், சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்திய விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. இளையராஜா இசை நிகழ்ச்சியை அவர் நடத்தக்கூடாது. அரசு தரப்பில் இருந்து ஒருவரை நியமித்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் அதில் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு பழைய கணக்கை காட்டக்கூடாது என்று கூறினார்.