கரூரை அடுத்த புலியூரில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இரு தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, தான் படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பாபு தன்னை இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாபுவை கைது செய்து விசாரித்தனர். அதன்பிறகு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பாபுவை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் தங்களது ஆசிரியர் மீது மாணவி பொய் புகார் அளித்து இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவ, மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவ, மாணவிகள் கலைந்து வகுப்பறைக்குச் சென்றனர்.