பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார்.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், கோவை சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பா.ஜ.க. பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் அழகுவடிவிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடத்திய 3 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. இதனையடுத்து விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், “கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைத்தது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வாரணாசி தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக இருக்கும் பிரதமர் மோடி, கோவை அரசு பங்களாவில் தங்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.