ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக தரும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதையடுத்து அரசு தரப்பில் திருப்பதி லட்டுவை சோதனை செய்யப்பட்டது. முடிவில் லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என தெரிய வந்தது. இது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் பிரபல யூட்யூபர்களான கோபி மற்றும் சுதாகர், தங்களது யூட்யூப் சேனலான ‘பரிதாபங்கள்’ சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சில மணிநேரங்களிலே மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. மேலும் சில விமர்சனங்களும் எழுந்தது. இதையடுத்து அவர்கள் அந்த வீடியோவை நீக்கினர். பின்பு “லட்டு பரிதாபங்கள் வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால், அதற்க்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என சமூக வலைதள வாயிலாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. சார்பில் பரிதாபங்கள் யூட்யூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆந்திர டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க.வை சார்ந்த அமர் பிரசாத் ரெட்டி கொடுத்த புகார் மனுவில், “வீடியோவை நீக்கினாலும் இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது. மேலும் வெறுப்பை பரப்பும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.