சிதம்பரம் அருகே கீழதிருக்கழிபாலை ஊராட்சி மன்றத் தலைவரைச் செயல்படவிடாமல் தடுக்கும் அதே ஊராட்சி துணைத்தலைவர் மீது பரங்கிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயசீலன், சிறப்புத் தலைவர் சிவசங்கரி ராம்மகேஷ், ஒன்றியக் கூட்டமைப்பு துணைத் தலைவர் இளவரசு, செயலாளர் மரகதம், நஞ்சமகத்து வாழ்கை ஊராட்சி தலைவர் ராஜகுமாரி, கீழ்அனுவம்பட்டு ஊராட்சி தலைவர் மாரியம்மாள், டி.எஸ்.பேட்டை தலைவர் மோகன்காந்தி இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
அந்த மனுவில், பரங்கிப்பேட்டை ஒன்றியம் கீழத்திருக்கழிபாலை ஊராட்சி மன்றத் தலைவராக சுழற்சி முறையில் ஆதிதிராவிடப் பெண்ணுக்கு ஒதுக்கியதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தற்போது எங்கள் ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள லட்சுமணன் (மாற்றுச் சமூகம்) தேர்தலின்போது எனக்கு எதிராக அவரின் ஆதரவு வேட்பாளரை நிறுத்தினார். அவர் தோல்வியடைந்த ஆத்திரத்தில் தேர்தல் முடிந்ததுமுதல் என்னிடம் விரோதமாகவும், என்னை ஜனநாயகப் பூர்வமாக, சுதந்திரமாக மக்களுக்கான பணி செய்யவிடாமலும் தடுத்து வருகிறார். மேலும், ஆணாதிக்க சிந்தனையுடன் அணுகும் போக்குடன் செயல்படுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஊராட்சியில் உள்ள பள்ளிக் கூடங்களில் என்னைக் கொடியேற்றக் கூடாது என மறைமுகமாகப் பேசியது மட்டுமல்லாமல் அவரும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். கிராமசபைக் கூட்டத்தை தான் சொல்லும் இடத்தில்தான் நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகிறார்.
அவர் சொல்லுகின்ற பணிகளை தான் தீர்மானம் போடவேண்டும் என்றும் எந்தப் பணிகள் நடந்தாலும் அந்தப் பணிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் PFMS-ல் கையொப்பம் இடாமல் அலையவிடுகிறார். மேலும், எங்கே வேலை நடந்ததென தெரியாது எனக்கூறி அலைக்கழிப்பார். 10 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய கோழிகளை அவருக்குச் சொந்தமான 7 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும் என யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல், கால்நடை மருத்துவரிடம் பயனாளிகளை தேர்வு செய்து கொடுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டபோது ”உன்னால் என்ன முடியுமோ அதை செய்துகொள்” என அலட்சியமாகக் கூறினார்.
அவர் சொல்லும் நபர்களுக்குத்தான் பணித்தளப் பொறுப்பாளர் பணி வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து நிர்பந்தம் செய்துவருகிறார். அவர் சொல்வதை மறுக்கவே ”குப்பையில் கிடந்ததெல்லாம் பதவிக்கு வந்தால் இப்படிதான் ஆடும், இரு இரு ஆட்டத்தை நிறுத்திவிடுகிறேன்” என நேரிடையாகக் கேவலமாகப் பேசுகிறார்.
அவர் கேட்கும் கமிஷனைக் கொடுக்கவில்லை என்பதாலும், அவர் சொல்வதைக் கேட்கவில்லையென்பதாலும் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகி வருகிறது. அவரை மீறி ஜனநாயக ரீதியில் நான் செயல்படத் துவங்கியதால், கடந்த நவம்பர் 6 ஆம் தேதியன்று 100 நாள் வேலையில் இருந்த பெண்களைப் பொய் சொல்லி அழைத்துவந்து, எனக்கு எதிராகப் பொய்யான குற்றச் சாட்டுகளைச் சொல்லி ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பணிதளத்தில் 100 நாள் வேலை செய்யும் பெண்களை இப்படிச் சட்டவிரோதமாக தனது சுய நலத்திற்காகப் போராடத் தூண்டியுள்ளார். எனவே என்னை சுதந்திரமாகச் செயல்படவிடாமலும், அதிகாரத்தை வைத்து கமிஷன் கேட்டு மிரட்டுவதும், பெண் என்பதால் ஆணாதிக்க சிந்தனையுடன் அணுகுவது எனத் தொடர்ந்து செயல்படும் கீழத்திருக்கழிபாலை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மீது தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு கூறுகையில், தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் அதிகாரம் குறைக்கப்படுகின்றபோது, 50 சதமான பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளநிலையில், அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்தும் செயல், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் செயலை தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.