கோவையில் திமுக கவுன்சிலர் ஒருவர் சாலையோரம் நடப்பட்டிருந்த மரக்கன்றை உடைத்து போட்டுவிட்டு 'இங்கெல்லாம் மரம் வளர்க்கக் கூடாது. யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ' என்று பேசும் வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ளது ராஜன் நகர். இப்பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் வீட்டிற்கு முன்பு மரக்கன்றுகளை நட்டு அதற்கு கூண்டு அமைத்து பராமரித்து வந்தார். அப்பொழுது அங்கு வந்த கோவை மாநகராட்சியின் 34வது வார்டு கவுன்சிலர் மாலதி மரக்கன்று எல்லாம் நடக்கூடாது எனத் தகராறில் ஈடுபட்டார். மேலும் வீட்டின் முன்புறம் நடப்பட்டிருந்த மரக்கன்றை ஒடித்துப் போட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் 'இங்கெல்லாம் மரம் வளர்க்கக் கூடாது, யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ' என்று பேசுகிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.