Skip to main content

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மரணம்...! - முத்தரசன் இரங்கல் அறிக்கை..

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Communist woman leader dies ...! -Mutharasan condolence

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரும் தொழிற்சங்க தலைவருமான சென்னையைச் சேர்ந்த சுசீலா காலமானார். இது சம்பந்தமாக சி.பி.ஐ.யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தென்சென்னை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளருமான ஆர். சுசீலா (வயது 63) இன்று (23.09. 2021) காலை 7.30 மணிக்கு சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர்.

 

ஆர். சுசீலா, சென்னை பெருநகர் மைலாப்பூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். பல்லாவரத்தில் இயங்கிவந்த லண்டன் ரப்பர் கம்பனியில் வேலை செய்துவந்தார். இந்த நிறுவனம் பின்னர் டி.டி.கே. எல்.ஐ.ஜி. நிறுவனமாக மாறியது. வேலை செய்துவந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்ததில் முன்னணி பங்கு வகித்தவர். இதனைத்  ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க அமைப்பில் இணைந்து பிற பகுதி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிவந்தவர்.

 

தொழிலாளர் நலனைப் பாதுகாக்கும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர். சுசீலா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பொதுவாழ்வை மேற்கொண்டார். கட்சி, தொழிற்சங்கம் மற்றும் மாதர் சங்கம் என எல்லா அமைப்புகளிலும் பொறுப்புகளை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டவர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் நட்பு பாராட்டியவர். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவராக நீண்டகாலம் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். அனைத்து மாவட்டங்களுக்கும் சலிப்பறியாது பயணம் செய்து பெண்ணுரிமை போராட்டங்களை முன்னெடுத்தவர்.

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். கட்சியின் மூத்த தலைவர்களான இரா. நல்லகண்ணு, தா. பாண்டியன், ஏ.எம். கோபு, எஸ்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் மாறாத பாசத்தைப் பெற்றவர். கட்சித் தோழர்கள் அனைவருக்கும் தோழமையோடு உதவியும், சேவையும் புரிந்துவந்தவர். வீட்டு வேலைத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமை கருத்தாக அரசு அமைப்புகளுடன் தளர்வில்லாத போராட்டம் நடத்தியவர். அவரது இழப்பு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

 

சில மாதங்களுக்கு முன் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிரிழப்பு ஏற்பட்டது. ஆர். சுசீலாவின் கணவர் பி. சண்முகமும், இவர்களது மூத்த மகன் முரளியும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டனர்.

 

இரண்டாவது மகன் அரியும், மருமகள் ஜீவாவும் பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். காலமான ஆர். சுசீலாவின் நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் செலுத்தி, ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது மகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்