சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதனிடையே, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், "தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிதி மேலாண்மையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிக்கு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஏற்படுத்தியுள்ளனர்." என்றார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராமசாமி கூறுகையில், "அறிவிப்புகளில் ஆர்வம் காட்டுவதைப் போல் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, நடப்பு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் பிப்ரவரி 27- ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்; பிப்ரவரி 27-ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை; பிப்ரவரி 25-ஆம் தேதி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.