கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிமேடு பகுதியில் கருப்பசாமி என்பவர் நத்தத்தில் உள்ள நிலத்தில் 10 அடிக்கு சுவர் எழுப்பி வீடு கட்ட குழி தோண்டி வைத்துள்ளார். இதனால் அந்த வழியாக கேணிக்கு தண்ணீர் எடுக்க செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்துள்ளது. மேலும் கோவிலுக்கு வரவும், மயானத்திற்கு செல்லவும் இது முக்கியமான பாதை என்பதால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குழி தோண்டி வைத்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கேணிக்கு அருகில் செப்டிக் டேங்க் தொட்டி கட்டி உள்ளதால் குடிதண்ணீரில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் ஆக்கிரமிப்பு செய்துள்ள 10 அடி சுவர் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, அப்பகுதியைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரவக்குறிச்சி தாலுக்கா அலுவலகம் அருகே கரூர் - அரவக்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்த பின்னர், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.