Skip to main content

உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

CM orders Rs 10 lakh for family of deceased fisherman

 

உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் வழங்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (22/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 18/10/2021 அன்று IND-TN- 08- MM- 201 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர் என்றும், அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரிய வந்ததையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். 

 

மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் (வயது 22), த/பெ. சுதாகரன் மற்றும் சேவியர் (வயது 38), த/பெ. அருளானந்தம் ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (வயது 28), த/பெ.ராசு என்பவர் உயிரிழந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வர பெற்றது. 

 

இந்நிகழ்வில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் என்பவரது குடும்பத்தாருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்