“சாதிவெறி பிடித்து, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வெறி பிடித்து அலையும் பிற்போக்கு சக்திகளுக்குக் கடிவாளம் போட்டு, கட்டுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.” என கோகுல்ராஜ் ஆணவக் கொலை சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 2015 ஜூன் 24 ஆம் தேதி சாதிவெறி, ஆதிக்க சக்திகளால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுத் தளத்தில் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியது. கோகுல்ராஜ் உடன் பயின்ற மாணவியிடம் நேசமுடன் பழகியதை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறிக் கும்பல் ஆணவப்படுகொலையை அரங்கேற்றி, சமூகத்தை அச்சுறுத்தி, ஆதிக்கம் செலுத்த முனைந்தது. கோகுல்ராஜ் ஆவணக் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வரலாறு காணாத கடும் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. கோகுல்ராஜ் மரணத்துக்கு காரணமான சுவாதி பிறழ் சாட்சியானதும், உயர் நீதிமன்றம் சட்ட நெறிமுறைகளில் நின்று வழங்கப்படும் நீதியை விட மேலானது சமூகத்தில் எதுவும் இல்லை, மனசாட்சிக்கு எதிராகப் பேசுவது கூடாது என்று எடுத்துக் கூறியும், அவர் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் துணிந்தார் என்பது சமூகத்தில் நிலவி வரும் சாதி வெறியர்களின் ஆதிக்கத்தை துல்லியமாக வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இந்த நிலையில் கோகுல்ராஜ் ஆணவக் கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு நேற்று (02.06.2023) குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதில் பிழை காண முடியாது என உறுதி செய்து, குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (02.06.2013) உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் ஊடகங்களைப் பயன்படுத்த முயற்சித்தமைக்கு இரையாகாமல் ஊடகங்கள் நீதியை நிலைநாட்ட, உதவியது அதன் முதிர்ச்சியைக் காட்டுவதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
சாதிவெறி பிடித்து, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வெறி பிடித்து அலையும் பிற்போக்கு சக்திகளுக்குக் கடிவாளம் போட்டு, கட்டுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதி மன்றத்தின வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்த வழக்கில் ஆரம்பம் முதல் இறுதி வரை விழிப்போடு கண்காணித்து வாதடி, நீதியை நிலைநாட்ட உதவிய மூத்த வழக்கறிஞர்கள் ப.பா. மோகன், சங்கரசுப்பு உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.