விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு உதவிப் பெறும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி பதிவு செய்து அரசு தரும் நலத்திட்ட உதவிகளை முறைகேடாக பெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடி ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று பள்ளிக்கல்வித் துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முறைகேடுகளைக் களையும் நோக்கத்திலும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள், மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு 5ஆம் தேதிக்குள் அறிக்கையை அரசிடம் சமர்பிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.