சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு
கிரானைட் முறைகேடுகள் குறித்த சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிடக்கோரி, மதுரை மாவட்டம், மேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை வகித்து கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியதாவது: நரபலிகள் மற்றும் ரூ.1 லட்சம் கோடி கிரானைட் முறைகேடுகளை கண்டுபிடித்த முன்னாள் கலெக்டர் சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுவரை அவரது கமிஷனை கலைக்கக்கூடாது.
ஒரு அதிகாரி சுடுகாட்டில் படுத்திருந்து 16 மாதங்களாக பாடுபட்டு தாக்கல் செய்த அந்த அறிக்கையை வெளியிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதர்களை நரபலி கொடுத்த கொள்ளைக்கும்பல் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சகாயம் கமிஷனில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்பதையும் விளக்க வேண்டும். சகாயத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.