தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற தமிழி கல்வெட்டுப் பயிற்சியில் சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய எழுத்துருக்களைக் கண்டு கல்லூரி மாணவர்கள் வியந்தனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி எழுத்துகள் மற்றும் கல்வெட்டுகள் படித்தல் பயிற்சி நடைபெற்றது. வரலாற்றுத் துறை தலைவர் ஆ.தேவராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜ. பூங்கொடி பயிற்சியை தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு தமிழி கல்வெட்டு எழுத்துகளின் சிறப்புகளை கூறி அதை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,
''தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் பழமையை அறிந்திட உள்ள எண்ணற்ற சான்றாதாரங்களில் முதன்மையானது தமிழி எழுத்துச் சான்றுகள். இவை பானை ஓடுகள், காசுகள், அணிகலன்கள் மற்றும் மலைக்குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எழுத்தறிவின் தொன்மையைக் காட்ட இவை முதன்மையானதாக இருந்தன. உலகின் பெரும்பாலான மொழிகளில் உள்ள வேர்ச்சொற்கள் தமிழாக இருப்பது தமிழின் தொன்மையை உணர்த்தும். தமிழி எழுத்துகள் உலகின் மிகப் பழமையான எழுத்துருக்கள்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக 150 ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் சீவல் என்ற ஆங்கிலேயரால் மதுரை மீனாட்சிபுரத்தில் தமிழி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவை வணிகப் பெருவழிகளில் நல்ல விளைச்சல் உள்ள பகுதிகளிலும், முக்கிய நகரங்களைச் சுற்றி அமைந்த குன்றுகளிலும் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாண்டிய நாட்டில் தான் உள்ளன''என்றார்.
பின்பு தமிழி எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் பயிற்சி தரப்பட்டது. மறுகால்தலை, விக்கிரமங்கலம், அழகர் மலை, கொங்கர் புளியங்குளம் உள்ளிட்ட மலைக்குகைகள், பானை ஓடுகள், காசுகள், முத்திரைகளில் உள்ள தமிழி கல்வெட்டுகளை படங்கள், அச்சுப்படிகள் மூலம் படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. அப்போது ஆங்கிலம், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்துகள் தமிழி போல உள்ளதைக் கண்டு மாணவ மாணவிகள் வியந்தனர்.