‘படியில் பயணம்; நொடியில் மரணம்’ என்ற விழிப்புணர்வு வாசகம் பிரசித்தமானது. ஆனாலும், பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வது நின்றபாடில்லை. குறிப்பாக, மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை ஏதோ சாதனை செய்வதுபோல நிகழ்த்தியபடியே உள்ளனர். இத்தகைய படிக்கட்டு பயணம் அருப்புக்கோட்டை கல்லூரி மாணவர் மாதேஸ்வரனின் உயிரைப் பறித்துவிட்டது.
அருப்புக்கோட்டை தாலுகா வெள்ளையாபுரத்தில் வசித்துவந்த மாதேஸ்வரன் (வயது 20), விருதுநகர் செந்தில்குமாரநாடார் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். தனது ஊரிலிருந்து அருப்புக்கோட்டைக்கும், அங்கிருந்து விருதுநகர் கல்லூரிக்கும் அரசுப் பேருந்தில் பயணித்து வந்த மாதேஸ்வரன், 14-ஆம் தேதி அரசுப் பேருந்து படிக்கட்டில் சிலரோடு பயணம் செய்துள்ளார். அப்போது, பாலவநத்தத்தை அடுத்துள்ள எஸ்.எம்.எஸ். தோட்டம் அருகே தவறி விழுந்து இறந்து போனார்.
மாணவர் மாதேஸ்வரனின் தந்தை அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசுப் பேருந்தில் கூட்டம் அதிமாக இருந்ததால் மாதேஸ்வரன் படிக்கட்டில் பயணம் செய்ததாகவும், ஓட்டுநர் முனியசாமி வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்றதாகவும், ஓட்டுநர் முனியசாமி மற்றும் நடத்துநர் பாலச்சந்தர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.