தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக ஒன்றாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவியின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இறுதியாக மாணவி கோவையில் பெண் என்ஜினீயருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதன்பிறகு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மாணவியுடன் இருந்த பெண் என்ஜினீயர், மாணவி படித்து வரும் அதே கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட, அருகருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இருவரும் சகஜமாகப் பழக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படவே தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறியுள்ளனர். அதன் பிறகு தனது படிப்பு முடிந்த பிறகு சீனியர் மாணவி கோவைக்கு வேலைக்கு சென்றதால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் குறைந்திருக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வர, மாணவியைக் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி வீட்டை விட்டு வெளியேறி பெண் என்ஜினீயருடன் கோவையில் வசித்து வந்திருக்கிறார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, போலீசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, பெண் என்ஜினீயர் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உறவில் ஈடுபட்டது தவறு என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. பிறகு திடீரென அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அந்த பெண்ணிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றார்.
இதனிடையே, அந்த கல்லூரி மாணவிக்கு பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அதனை மறுத்த அந்த மாணவி, கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு எல்லாமே என் பெண் தோழிதான். காப்பகத்திற்கு வேண்டுமானால் செல்கிறேன். ஆனால், என் பெற்றோருடன் மட்டும் நான் சொல்ல மாட்டேன் எனக் கூற, அவரின் விருப்பப்படியே காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 377 படி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சேர்ந்து வாழ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.