கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் ராமன் பத்து கட்டளைகளை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
* பொதுமக்கள் கை, கால்களை சோப்பு போட்டு, குறைந்தபட்சம் 30 வினாடிகள் நன்றாகக் கழுவ வேண்டும்.
* சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களின் விவரத்தை அக்குடும்பத்தினர், உடனடியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 0427&2450022, 0427&2450023, 0427&2450498 ஆகிய எண்களுக்கும் தங்களின் விவரங்களை உடனடியாகவும், கண்டிப்பாகவும் தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்கள் வீட்டிலேயே தனித்து இருக்க வேண்டும்.
* சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவர்களிடம் சென்று உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
* நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், தவறாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், ஒரே இடத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது. அவரவர் வீட்டிலேயே நீங்கள் இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இரு நபர்களுக்குமிடையே குறைந்தபட்சம் 3 அடி இடைவெளி இருத்தல் வேண்டும்.
* இருமல், தும்மல் வந்தால் ஒரு கைக்குட்டையாலோ, துணியாலோ மற்றவர்களுக்கு நோய் பரவ இடம் கொடுக்காமல், முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
* மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் நீங்கள் வெளியே வர வேண்டாம்.
* பதற்றம் வேண்டாம், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* முன்னெச்சரிக்கையுடன் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* இந்நோய் பரவாமல் தடுத்திட தமிழ்நாடு அரசுக்கும், சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் காவல்துறைக்கும் நீங்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
ஏற்கனவே சேலம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இதுவரை 297 நபர்கள் வரப்பெற்று அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித நோய்த்தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகும் அவர்கள் அனைவரையும் 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அனைவரும் நலமாக உள்ளனர். இவர்களில் 98 நபர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித பாதிப்பும் இல்லாமல் 14 நாள்கள் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள 199 நபர்கள் 14 நாள்கள் இன்னும் நிறைவு பெறாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அங்கேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா&19 வைரஸ் தொற்று நோய் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்று வெளியிட வேண்டும். உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட வேண்டாம் எனக்கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.