திருச்சி மாவட்டத்தில், கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்கால், குடமுருட்டி உள்ளிட்ட வாய்க்கால்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணை நிரம்பும் சூழ்நிலையில் உள்ளது. அதனால் மேட்டூரிலிருந்து நாளை (10.11.2021) காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளதால், உள்ளூர் மழை, வெள்ளம் மற்றும் மேட்டூர் அணை நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை உருவாகும். இதைத் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 10,000 கன அடி தண்ணீர் தற்போது முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேற்று மாலை கொள்ளிட ஆற்றில் தண்ணீர் திறக்கும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது, “கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை திருப்பிவிடலாம். இதற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டது. ஆகையால் தற்போது முன்கூட்டியே 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டதால் திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏற்படாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.