வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் பகுதியைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை. இந்த கோரிக்கை கடந்தாண்டு ஏற்கப்பட்டு 2019 நவம்பர் 24ஆம் தேதி புதிய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்பட துவங்கியது.
முதல் மாவட்ட ஆட்சித்தலைவராக சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அரசின் 33 துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உட்பட மாவட்ட அதிகாரிகளுக்கான அலுவலங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உட்பட அலுவலகம் அமைக்க அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல இடங்கள் பார்வையிடப்பட்டன. இறுதியில் திருப்பத்தூர் வனத்துறைக்கு சொந்தமான திருப்பத்தூர் நகரின் மையத்தில் திருப்பத்தூர் வன ரேஞ்சர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் காலியாக உள்ள 14.7 ஏக்கர் இடத்தினை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைக்க எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. வனத்துறை வழங்கும் இந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் இடம் வழங்குவது என அரசு முடிவு செய்தது.
அந்த 14.7 ஏக்கர் இடத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
2021ஆம் ஆண்டு இந்த பணிகள் முடிந்து இவ்வளாகம் திறப்பு விழா காண வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை நாமக்கல்லை சேர்ந்த முதல்வருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.