ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.41 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 537 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.82 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.87 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர் வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.