திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரப் பகுதிக்குட்பட்ட சான்றோர் குப்பம் முதல் கன்னிகாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 143 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செப்டம்பர் 21 இரவு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக போடப்பட்டு இருந்த இரும்பு சாரம் திடீரென சுமார் 25 மீட்டர் அளவிற்கு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நரேஷ், தினேஷ் பாஸ்மால், நான்சிபாஸ்மால், ராம் , குல்தீப் ராவ், அனீஸ் குமார் ஆகிய 6 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்
படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நரேஷ், தினேஷ் பாஸ்மால், நான்சிபாஸ்மால் ஆகிய மூன்று பேரையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் மேம்பால கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேம்பால பணிக்காக போடப்பட்ட இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.