அ.தி.மு.க.வின் கோட்டையை தகர்த்த கோவை மாநகராட்சியின் தி.மு.க.மேயர் யார்...? என்கிற விவாதம் தான் மாவட்டம் முழுக்க அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 96 வார்டுகளை அபாரமாக வென்றுள்ளது. கோவை மேயர் பெண்கள் பொது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் துணை மேயர், முன்னாள் எம்.எல்.ஏ. தற்போதைய மாவட்ட மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான சிங்காநல்லூர் கார்த்திக். இவர், கடந்த 10 அண்டு கால அ.தி.மு.க.ஆட்சியில் கோலோச்சிய மாஜி வேலுமணியின் அடாவடிகளை முறியடித்து கோவையில் கட்சியை உயிர்ப்புடன் செயல்பட வைத்தவர். இவரது மனைவி இலக்குமி இளஞ்செல்வி. இவரும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவரான இலக்குமி இளஞ்செல்வி என்ற இவரின் பெயரை இவருக்கு வைத்ததே மறைந்த பேரறிஞர் அண்ணா என்பது குறிப்பிடதக்கது. அரசியல் அனுபவம், நிர்வாக திறமை கொண்ட இலக்குமி இளஞ்செல்வியே முதல் சாய்ஸ் சாக இருக்கிறார்.
மேலும் கூடுதலாக மேற்கு மாவட்ட மாநகர பொறுப்பாளர் சேனாபதியின் மகளான 22 வயது நிவேதா, அடுத்து மு.மா.சண்முகசுந்தரத்தின் மருமகள் சாந்தி முருகன், எக்ஸ் கவுன்சிலர் மீனா லோகு என நான்கு பேரின் பெயர் பட்டியல் தி.மு.க. தலையிடம் இருக்கிறது. மாநகரில் மட்டும் ஐந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள் இவர்களின் அடாவடி அரசியலை எதிர்கொள்ள அரசியல் சார்ந்த ஆளுமை திறன் என்ற பிளஸ் இலக்குமி இளஞ்செல்விக்கு உள்ளது. அடுத்து அரசியல் அனுபவம் இல்லை என்றாலும் இளம் வயது என்கிற ப்ளஸ்சில் நிவேதா இருக்கிறார். இருவரில் ஒருவர்தான் மேயர். துணை மேயர் ரேசில் கார்த்திக் செல்வராஜ் என்பவர் இருக்கிறார். அ.தி.மு.க.கோட்டையை மக்களின் வாக்கு பலத்தால் நொறுக்கிய கோவை மக்களுக்கு நிர்வாக திறன் கொண்ட சிறந்த பெண் மேயரை தி.மு.க. அமர வைக்குமா?