கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ். சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். தன்னுடைய தந்தை டிரைவர் என்பதால், ஷர்மிளாவுக்கு சிறுவயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகவும் கொண்டுள்ளார்.
அதே சமயம் ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என நினைத்த ஷர்மிளாவிற்கு தனது குடும்பத்தில் இருந்தும் சம்மதம் கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஷர்மிளா, 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதன்பிறகு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். இதையடுத்து ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்திலும், சமுக வலைதளங்களில் கவனம் பெற்றார். அதன் மூலம் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக கோவையில், முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்துக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த கனிமொழி, ஷர்மிளாவிற்கு கை கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். திமுக எம்.பி கனிமொழி சந்திப்பு குறித்து பேசிய பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, "பேருந்து ஓட்டும் போது அவருடன் அதிகமாக பேச முடியாததால் பீளமேட்டில் இறங்கி தன்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் தாங்கள் செய்து தருவதாகவும் கனிமொழி மேடம் தெரிவித்தார். தன்னை கட்டி அனைத்து பரிசு அளித்தார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறினார் ஷர்மிளா.