கரோனாவின் பாதிப்பிலிருந்து பொது மக்களைக் காக்கும் நோக்கில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க பொதுமக்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். அங்குள்ள மளிகை கடைகளை விட மருந்து கடைகள் முன்பாக மருந்து வாங்க நூற்றுக்கணக்கான பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நின்று மருந்துகள் வாங்கி செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காகச் செல்கிறார்கள் என்பதும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதையும் பரிசோதித்து அனுப்பி வருகின்றனர்.
பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்குப் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் தண்ணீர், பழம், பிஸ்கட் மற்றும் உணவுகளைக் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல் காய்கறி கடைகள் முன்பாக ஆறு கோடுகள் அமைத்து ஒரு மீட்டர் இடைவெளியில் ஆட்களை நிறுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்க வேண்டும் எனப் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.