கீரமங்கலம் பகுதியில் புயலில் சாய்ந்த தென்னை மரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை மர இருக்கை மற்றும் மேஜைகள் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் விழா மேடைகளை அலங்கரிக்க செல்கிறது.
கஜா புயலில் புதுக்கோட்டை, மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் அதிகமாக தென்னை மரங்கள் சாய்ந்து தென்னை விவசாயிகளை நடைபிணமாக்கிவிட்டது. நவம்பர் 15 ந் தேதி சாய்ந்த தென்னை மரங்களை இன்னும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இருந்து அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் செங்கல் சூலை மற்றும் காங்ரீட் பலகைகளுக்காக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதிலிருந்து அடி மற்றும் நுனி பகுதிகள் தோட்டங்களில் சிதறி கிடக்கிறது. அவற்றையும் அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெய்வத்தளி கிராமத்தில் மீட்பு பணியில் களமிறங்கிய நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவினர் கழிவுகளாக ஒதுக்கப்பட்ட அடி மற்றும் நுணிப் பகுதிகளில் மேஜை மற்றும் இருக்கைகள் செய்ய தொடங்கினார்கள். இந்த இருக்கைகளை பரிசு பொருளாகவும் கொடுத்தனர். அதற்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கீரமங்கலம், கறம்பக்காடு பகுதியில் நடக்கும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்காக விழா மேடையில் தென்னை மர இருக்கைகள் அமைத்துள்ளனர். மேலும் இருக்கைகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பாலீஸ் செய்யப்பட்டுள்ளது.