என்.எல்.சி நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுமார் 83 லட்ச ரூபாய் செலவில் கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியில் மாவட்ட காசநோய் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 40 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதேபோல் அன்னவல்லி ஊராட்சியிலுள்ள வழிசோதனைபாளையம் கிராமத்தில் என்.எல்.சி சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் 1 லட்சம் கொள்ளளவுள்ள புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்கும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
அப்போது அவர் பேசுகையில், “என்.எல்.சியின் சி.எஸ்.ஆர் நிதியில் பல்வேறு பணிகளை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். ஆவண செய்வதாகக் கூறி உள்ளனர். என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ வசதி, பாலம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை 100 கோடி ரூபாயில் மதிப்பில் மேற்கொள்ள என்.எல்.சி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க எழுத்து தேர்வில் பங்கேற்கும் போது கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட என்.எல்.சி நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்களில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சியில் புதிதாக 1200 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்புக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு 20% போனஸ் மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. என்.எல்.சியில் தற்போது 18,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களில் 95 சதவீதம் பேரும் நிரந்தரத் தொழிலாளர்கள் 83 சதவீதம் பேரும் தமிழர்கள் உள்ளனர்.
தமிழர்களுக்கு என்.எல்.சியில் வேலைவாய்ப்பு இல்லை என்பது தவறான கருத்து. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால் பற்றாக்குறையான 1000 மெகாவாட் மின் உற்பத்தி உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி நிறுவனம் ஒரு யூனிட் 2.30 ரூபாய்க்கு கொடுக்கிறது. தமிழக அரசு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை. என்.எல்.சியில் மத்திய அரசின் பங்கு தான் அதிக அளவில் உள்ளது. அதே போல் என்.எல்.சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்கிறது. என்.எல்.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நெய்வேலி மற்றும் கடலூர் பகுதிக்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.