விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சின்னதச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள், மகளிர் குழுவினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு பயிர்க் கடன், நகைக் கடன், மகளிர் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் கேஷியராக உள்ள ரவி பல லட்ச ரூபாய் பணத்தைக் கையாடல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கடந்த 27ஆம் தேதி திடீரென்று தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகார் தொடர்பாகக் கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் யசோதா தேவி தலைமையில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதன்படி நேரடி விசாரணை மேற்கொண்டதில் கேஷியர் ரவி பணம் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்தக் கையாடல் சம்பந்தமாகக் கூட்டுறவு சங்கத்தின் கணக்குகளைச் சரியாகக் கண்காணிக்காத காரணத்தால் சங்க செயலாளர் சரவணன் மற்றும் பணத்தைக் கையாடல் செய்த கேஷியர் ரவி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் குற்றவியல் நடவடிக்கை தொடர்பாகக் கண்காணிப்பு அலுவலர் விக்ரம் தலைமையிலான குழுவினர் தணிக்கை செய்து வருகின்றனர்.