திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குக் கிழக்கு மாவட்ட செயலாளருமான பழனி சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், தலைமையிலும். மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜ், ராஜாமணி, பிலால் உசேன். மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை. ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாநகர பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஜானகிராமன் அக்கு.சந்+திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “திண்டுக்கல் என்றாலே எம்.ஜி.ஆர் என்ற நிலைமை மாறி தற்போது முதல்வர் ஸ்டாலின் தான் என்ற நிலையை நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். கடந்த தேர்தலில் ஒரு சில குறைகள் இருந்தது. அதனை நீக்கிட பாடுபட வேண்டும். தமிழக முதல்வரின் எல்லாருக்கும் எல்லாம் என்பது மக்களுக்குக் கிடைத்து விட்டது. உங்களுக்குக் கிடைப்பதற்கு நாங்கள் இரண்டு அமைச்சர்கள் உள்ளோம். உங்களைப் பாதுகாக்கவும் உங்களுக்கு உதவி செய்யவும் நாங்கள் எந்த நிலையிலும் தயாராக உள்ளோம்.
தமிழகத்திற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையிலும் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்து திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர். இந்தியாவில் இது போன்ற முதல்வர் வேறு யாரும் கிடையாது. திமுக என்பது சர்வ சாமானியர்களின் இயக்கம். பாரம்பரியமாக வாழக்கூடிய இயக்கம். காங்கிரஸ் இயக்கம் பாரம்பரியத்தைச் சொன்னதால் தான் அந்த இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சாமானியர்களுக்காகக் கலைஞர் உழைத்த காரணத்தாலும் தற்பொழுது முதல்வர் உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது மக்கள் மத்தியில் நிரூபணம் ஆகி உள்ளது. குடும்பத் தலைவிக்கான மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் விடுபட்டுப் போனவர்களுக்குக் கூடிய விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதோடு கிளைக்கழகம் மற்றும் பேரூர் கழகங்களில் கூட்டம் நடத்த வேண்டும். இப்படி நடத்தக்கூடிய கூட்டங்களில் கட்சிக்காரர்கள் குறை சொன்னாலும் அதை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றிக் கொடுக்கிறோம். முதல்வர் இளைஞர் அணி செயலாளராக இருந்தபோது இரவு பகல் பாராமல் எப்படி உழைத்தாரோ அதே மாதிரி உதயநிதி ஸ்டாலினும் உழைத்து வருகிறார். அதுபோல் நாமும் கட்சி வளர்ச்சிக்காக அயராது உழைக்க வேண்டும்” என்று கூறினார்.