புதுக்கோட்டை மாவட்டம் செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் - மாரிக்கண்ணு(46) தம்பதியினர். இவர்களுக்கு மலர், செல்லமணி என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால், இரு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு செல்வராஜ் குடும்பத்தினரைப் பிரிந்து சென்றுவிட்டார். மாரிக்கண்ணு இரு பெண்குழந்தைகளை வைத்துக் கொண்டு விவசாயக் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார். மலருக்கு உள்ளூரிலேயே திருமணம் செய்துவிட்ட நிலையில், இளைய மகள் செல்லமணி 10 வகுப்போடு நிறுத்திவிட்டு குடும்ப வறுமையால் துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் மாரிக்கண்ணு சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்குப் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது நார்த்தாமலை அருகே சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர மோதியதில் மாரிக்கண்ணு படுகாயம் அடைந்தார். உடனடியாக மாரிக்கண்ணு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட மாரிக்கண்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும் இவரது உடல் உறுப்புகளை பொருத்தி உயிருக்குப் போராடும் பலரது உயிர்களைக் காப்பாற்றலாம் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜ்மோகன், மாரிக்கண்ணுவின் மகள்கள் மலர், செல்வமணி மற்றும் உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அதற்குஅவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாரிக்கண்ணுவின் கல்லீரல், கண்கள் மதுரைக்கும், ஒரு சிறுநீரகம் தஞ்சைக்கும், மற்றொன்று சிறுநீரகம், நுரையீரல் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், உயிரிழந்த மாரிக்கண்ணு உடலுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) ராஜ்மோகன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தையல் நாயகி, நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி மற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாரிக்கண்ணு உடல் அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு அனுப்பும் போது மருத்துவப் பணியாளர்கள் வரிசையாக நின்று கை கூப்பி வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
தங்கள் தாயின் உயிர் போனாலும் 6 பேரிடம் வாழ்கிறார் என்று உடல் உறுப்புகளை தானம் செய்த மகள்களைப் பொதுமக்கள் பாராட்டினர். இந்த தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி உயிர்நீத்த மாரிக்கண்ணு குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதுடன் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர்.
மேலும் அந்த கிராம மக்கள் கூறும் போது, முதலமைச்சரின் ஆறுதலும் நிவாரணமும் கிடைத்துள்ளது. அதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறிக்கொள்கிறோம். அதே போல 10 ம் வகுப்பு வரை படித்துள்ள மாரிக்கண்ணு மகள் செல்லமணிக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அங்கன்வாடியில் ஒரு அரசு வேலை கிடைக்கச் செய்தால் நன்றாக இருக்கும். முதலமைச்சர் கருணை காட்ட வேண்டும். இதற்கு அமைச்சரும் மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்ய வேண்டும் என்கின்றனர்.